சென்னை
சைக்கிளில் சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சென்னை ஐ.ஐ.டி. கேண்டீன் ஊழியர் அதிரடி கைது - பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்
|சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சைக்கிளில் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கேண்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24-ந்தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிளில் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி பரபரப்பு புகாரை அளித்திருந்தார். அதில், சைக்கிளில் சென்ற மாணவியை, இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து, பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி, மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடிவந்ததாகவும், அவ்வாறு தப்பி ஓடிவந்தபோது கூட அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் இருந்ததாகவும்' தெரிவித்திருந்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஐ.ஐ.டி.யில் இரவு பணியில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் 35 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. எனினும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண முடியவில்லை.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஐ.ஐ.டி.யின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வேலு சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேண்டீனில் ஜூஸ் மாஸ்டராக வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் (வயது 24) என்பவர்தான் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண் மானபங்கப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையின்போது அவர், சைக்கிளில் வந்த மாணவி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை நான் தூக்கிவிட்டேன்' என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.