சென்னை
மாணவி சத்யா கொலை வழக்கு: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி விசாரணை
|சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் உடனடியாக தொடங்கி உள்ளனர்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி அன்று கல்லூரி மாணவி சத்யாவை (வயது 20) மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளனின் மகன் சதீஷ் (23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது காதலை ஏற்க மறுத்ததால் சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்ததாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். சத்யா கொலை செய்யப்பட்ட துக்கம் தாங்காமல் அவரது தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். ஒரே நேரத்தில் 2 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. தந்தை-மகள் 2 பேரின் உயிர்களும் பறிபோனது மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
எனவே கொடூர மனம் படைத்த சதீஷூக்கு கடுமையான தண்டனையை விரைவில் பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வசம் இருந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டி விரைவில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சதீஷூக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரும் முனைப்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை களத்தில் உடனடியாக இறங்கி உள்ளனர். சம்பவம் நடைபெற்ற பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக், டி.எஸ்.பி.க்கள் செல்வக்குமார், புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் ரம்யா மற்றும் போலீசார் நேற்று மதியம் நேரில் ஆய்வு செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் சில நிமிடங்கள் மட்டும் அங்கு இருந்தார். பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனையை வழங்கி விட்டு உடனடியாக புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நேற்று மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட தண்டவாள பகுதி, ரத்தகறை படிந்திருந்த நடைமேடை ஆகிய இடங்களை பார்வையிட்டு வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் அனுசாவிடமும், 'சத்யாவை ரெயிலில் தள்ளிவிட்ட காட்சியை நீங்கள் பார்த்தீர்களா? அன்றைய தினம் என்ன நடந்தது?, சத்யாவின் சடலம் எவ்வளவு நேரம் இங்கு இருந்தது? என்பது குறித்து தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரி லட்சுமியிடம் விசாரணை நடைபெற்றது. அவரிடம், சத்யாவை தள்ளிவிட்ட மின்சார ரெயில் வந்த நேரம், புறப்பட்டு சென்ற நேரம் போன்ற விவரங்களை கேட்டு பதிவு செய்துக்கொண்டனர்.
கொலையாளி சதீஷ், சத்யாவை தள்ளிவிட்ட மின்சார ரெயிலை ஓட்டிய டிரைவர் கோபாலும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் சொல்லும் வாக்குமூலம் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாகவும், சாட்சியமாகவும் அமையும்.
ரெயில் நிலையத்துக்குள் சத்யா, சதீஷ் ஆகிய 2 பேரும் வரும் காட்சிகள், அவர்கள் இடையே தகராறு ஏதேனும் ஏற்பட்டதா? என்பதை அறிவதற்காக ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 28 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆராய்ந்தனர்.
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று விசாரணை நடைபெற்ற சமயத்தில் மின்சார ரெயில்களில் பயணிகள் வருவதும், போவதுமாக இருந்தது. இந்த நிலையில் விசாரணை முடிந்த பின்னர் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் காரில் ஏறி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தாம்பரத்தில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த மின்சார ரெயிலில் ஏறி பயணிகளோடு பயணிகளாக புறப்பட்டு சென்றனர்.
காதல் தொந்தரவு குறித்து வேதனையை வெளிப்படுத்தினாரா?
சத்யாவின் தோழிகளிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
சதீஷ் காதல் தொந்தரவு கொடுத்து சத்யாவை கொலை செய்துள்ளார். எனவே அவரது காதல் தொந்தரவு பற்றி சத்யா தனது கல்லூரி தோழிகளிடம் மனம் திறந்து பேசி இருக்கலாம். வருத்தப்பட்டிருக்கலாம். அவரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் பற்றி வேதனையுடன் பேசி இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கருதி உள்ளனர்.
எனவே இந்த விசாரணை வளையத்துக்குள் சத்யாவின் கல்லூரி தோழிகளும் கொண்டு வரப்பட உள்ளனர். சென்னை தியாகராயநகரில் அவர் படித்த கல்லூரிக்கு சென்று அவரது தோழிகளிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சம்பவத்தை நேரில் பார்த்ததாக டி.வி., யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்த வழக்கில் சாட்சியங்களாக சேர்ப்பதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனவே இந்த சம்பவம் குறித்து செய்தி பதிவிட்ட 'யூடியூப்' சேனல்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ரெயில் நிலையத்தில் சத்யாவின் சடலத்தை தூக்கி சென்ற ஊழியர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் உள்ளிட்டோரிடமும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை முடிந்த பின்னர் சத்யாவின் தாயார் மற்றும் உறவினர்களிடம், சதீஷின் தந்தை, உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.