திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
|திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழ்மொழி கற்போம் தொடக்க விழா
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தமிழ்மொழி கற்போம் திட்டம் தொடக்கவிழா திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டு ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தமிழ்மொழி கற்போம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
தமிழ்மொழியை கற்றுக் கொடுக்கும் திட்டம் முதல் மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் புலம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 45.5 கோடியாகும். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளை தாய்மொழியாக கொண்ட தொழிலாளர்களின் குழந்தைகள் என பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களாக 260 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களுடைய தாய்மொழியுடன் தமிழ் மொழியும் கற்றுத் தரப்படும்.
திருப்பூர் மாவட்டம் பொதுதேர்வுகளில் அனைத்து பள்ளிகளும் நல்ல தேர்ச்சி விகிதத்தில் உள்ளது. தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வழிக்கல்வியில் அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதால் பள்ளிகளை தரம் உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து அரசுப்பள்ளியில் தன்னுடைய பிள்ளைகளை பெற்றோர் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முழுமையாக நிறைவேற்றி தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.