கன்னியாகுமரி
பஸ்சில் மாணவி தவறவிட்ட 1 பவுன் கைச்சங்கிலி
|பஸ்சில் மாணவி தவறவிட்ட 1 பவுன் கைச்சங்கிலி நேர்மையுடன் ஒப்படைத்த கண்டக்டருக்கு பாராட்டு
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி போக்குவரத்து பணிமனையில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு கொட்டாரம் வழியாக நாகர்கோவிலுக்கு சென்றது.
அந்த பஸ்சில் விவேகானந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் அக்சயா என்ற மாணவி ஏறியுள்ளார். பின்னர் அந்த மாணவி கொட்டாரத்தில் இறங்கி பள்ளியை சென்றடைந்தார். அப்போது தான் கையில் அணிந்திருந்த 1 பவுன் கைச்சங்கிலியை காணாததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே இதுகுறித்து மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் மூலம் பணிமனையில் இருந்த தொ.மு.ச. செயலாளர் முருகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவர் நடந்த விவரத்தை கண்டக்டர் வேலாயுத பெருமாளின் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே மாணவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே தேடிபார்த்தார். அப்போது அங்கு கைச்சங்கிலி கிடந்தது. உடனே அந்த கைச்சங்கிலியை மீட்டு பணிமனை கிளை மேலாளர் மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் கைச்சங்கிலியை ஒப்படைத்த கண்டக்டரை அனைவரும் பாராட்டினர்.