கன்னியாகுமரி
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது
|நாகர்கோவிலில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாகா்கோவில்,
நாகர்கோவிலில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பள்ளி மாணவி
நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது21), கொத்தனார். இவருக்கும் இறச்சகுளம் பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி பள்ளிக்கு செல்லும் போது, மணிகண்டன் அவரை சந்தித்து வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலையில் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை அவருடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் மறுநாள் காலையில் சிறுமி தனது வீட்டிற்கு வந்தார்.
பலாத்காரம்
அவர் தனது பெற்றோரிடம், மணிகண்டன் தன்னை வலுக்கட்டாயமாக ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தான் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அழுதபடி கூறினார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் கொத்தனாரான மணிகண்டன் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் அவரை கைது செய்தனர். 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று உறவினர் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.