கன்னியாகுமரி
மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|வெளியூர் சென்று பொறியியல் படிப்பு படிக்க அனுமதிக்காததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
வெளியூர் சென்று பொறியியல் படிப்பு படிக்க அனுமதிக்காததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வெளியூர் சென்று படிக்க மறுப்பு
தோவாளை அருகே திருமலைபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி விண்ணரசி. ராஜேந்திரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் இருந்தனர். இவர்களுடைய 2-வது மகன் எபிராஜ் (வயது 18).
12-ம் வகுப்பு முடித்துள்ள எபிராஜை அந்த பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விண்ணரசி சேர்த்துள்ளார். ஆனால் எபிராஜிக்கு வெளியூர் சென்று அங்குள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு விண்ணரசி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
மாணவர் தற்கொலை
இதனால் மனவேதனையில் எபிராஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று விண்ணரசி உறவினரை பார்க்க சென்ற போது எபிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிய விண்ணரசி, மகன் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எபிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளியூர் சென்று கல்லூரி படிப்பு படிக்க அனுமதிக்காததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.