ராமநாதபுரம்
ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி மேற்படிப்புக்கு நிதியுதவி
|ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி மேற்படிப்புக்கு நிதியுதவியை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வழங்கினார்.
நயினார்கோவில்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பூவலிங்கம். இவருடைய மனைவி வனஜா. இவர்களது மகள் பவானி(வயது 17). தந்தையை இழந்த பவானி, தனது தாய் வனஜா பராமரிப்பில் திருப்பூரில் வசித்து வருகிறார். வனஜா அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து மகளை படிக்க வைத்தார்.
நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து பவானி சாதனை படைத்தார். 2 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தார்.
மாணவி தான் படித்த ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண்ணும் திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை அறிந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாயிலாக சாதனை படைத்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.
அதன்பிறகு மாணவியின் சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், ஆதங்கொத்தங்குடியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவி பவானி பூவலிங்கத்துக்கு மேற்படிப்பு படிக்க உதவித்தொகையை வி.ப.ஜெயபிரதீப் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார், ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் மோ.ராஜசேகர் (எ) திலீப் ஆகியோர் கலந்து கொண்டு நிதியுதவி அளித்தனர்.