< Back
மாநில செய்திகள்
ஜூன் மாதம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

ஜூன் மாதம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
29 May 2022 10:39 PM IST

அரசு பள்ளிகளில் ஜூன் 1-ந் தேதி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"கடந்த காலங்களில் மே மாதமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது கொரோனா விளைவாக மாணவர்கள் நலன் கருதி மே மாதம் 31-ந்தேதிவரை பள்ளித் தேர்வுகள் நடந்துவருகிறது. ஆகையால் மாணவர் சேர்க்கைப்பற்றி இதுவரை அறிவிப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கிவிட்டனர்.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையாக சேர்க்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டுமே தவிர, அரசே தேர்வு செய்து தருவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறப்பு என்பதை அரசே உறுதிசெய்வது போல் உள்ளது.

இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப்பற்றி அறிவிப்பு இன்னும் வராததால் பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் அச்சம் ஏற்படுகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை ஜூன் முதல் தேதியே தொடங்கிடவும், எதிர்வரும் காலத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் மாணவர் சேர்க்கையினை ஒரே நாளில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்