< Back
மாநில செய்திகள்
குலசேகரம் அருகே பாம்பு கடித்து மாணவன் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குலசேகரம் அருகே பாம்பு கடித்து மாணவன் சாவு

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

குலசேகரம் அருகே பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

குலசேகரம் மணலோடை அருகே உள்ள வலியமலை பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்தவர் மணிகண்டன் காணி. இவர் கேரளாவில் ரப்பர் பால்வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகேஸ்வரி. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் இருவர் இரட்டையர்கள். அதில் ஒரு மகன் அபினேஷ் (வயது 14). இவர் மணலோடை அரசு பழங்குடியினர் பள்ளி விடுதியில் தங்கி இருந்து 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அபினேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளான். இதற்கிடையே அவன் தனது தாயுடன் பொன்மனை அருகே உள்ள அம்பு இடிஞ்சான் மலையிலுள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளான். பின்னர் மாலையில் அங்கிருந்து தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்த போது அபினேஷை ஒரு பாம்பு கடித்துள்ளது.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளான். உடனே அப்பகுதி பழங்குடி மக்கள் அபினேசுக்குக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து மலைப்பகுதி என்பதால் அவனை அப்பகுதியினர் தொட்டில் கட்டி சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். பின்னர் அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்டி வீட்டுக்கு சென்ற இடத்தில் பாம்பு கடித்து பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பழங்குடியிருப்பு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்