< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்

சேலம் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 1:31 AM IST

சேலம் கன்னங்குறிச்சியில் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

கன்னங்குறிச்சி

சேலம் கன்னங்குறிச்சியில் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் மோதி மாணவன் சாவு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராஜேந்திரன் ஓட்டி வந்தார். கன்னங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி அருகில் வந்த போது அந்த வழியாக பள்ளி சீருடை அணிந்து நடந்து சென்ற மாணவன் மீது பஸ் மோதியது. இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக இறந்தான்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், துணை கமிஷனர் லாவண்யா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் இறந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது, இறந்த மாணவன் கன்னங்குறிச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நடராஜ் மகன் கவேஸ் (வயது 12) என்பதும், இவன் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவன் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்றான். அப்போது பள்ளியில் ஜாமண்டரி பாக்சை வைத்து விட்டு வந்து விட்டேன். அதை எடுத்து வருகிறேன் என்று தனது தாயார் கவுரியிடம் மாணவன் கூறி சென்ற போது பஸ் மோதி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்கள், பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த மாணவனின் பெற்றோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் விபத்து எப்படி ஏற்பட்டது என கேட்டு அறிந்தார்.

மேலும் செய்திகள்