< Back
மாநில செய்திகள்
தந்தை இறந்த நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மன உறுதியுடன் எழுதிய மாணவர்

நித்திக்ரோஷன்.

திருவாரூர்
மாநில செய்திகள்

தந்தை இறந்த நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மன உறுதியுடன் எழுதிய மாணவர்

தினத்தந்தி
|
25 May 2022 7:09 PM IST

தந்தை இறந்த நாளில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வை மன உறுதியுடன் எழுதினார்.

மன்னார்குடி:-

தந்தை இறந்த நாளில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வை மன உறுதியுடன் எழுதினார்.

மன்னார்குடி அருகே நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தேர்வு நாளில் சாவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கானூர் பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது49). இவர் ஊராட்சி தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நித்திக்ரோஷன் (15), மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நித்திக்ரோஷன் பொதுத்தேர்வை ஆர்வத்துடன் எழுதி வருகிறார். நேற்று முன்தினம் கணித தேர்வு எழுதுவதற்காக அவர் மும்முரமாக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அவருடைய தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

மன உறுதி

தேர்வு நாளன்று தந்தை இறந்தது அவருக்கு பேரதிர்ச்சியையும், பேரிழப்பையும் தந்தது. இத்தனை நாள் உடன் இருந்து ஊக்கப்படுத்திய தந்தை இறந்து விட்டாரே என நினைத்து மனம் வெதும்பி கண்ணீர் வடித்த நித்திக்ரோஷனை, உறவினர்கள் தேற்றினர். தந்தை இறந்த துக்கம் ஒருபுறம் வாட்டினாலும், மறுபுறம் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்த அவர், பள்ளிக்கு சென்று கணித தேர்வை நல்லபடியாக எழுதி முடித்தார்.

தேர்வு முடிந்ததும் சோகம் தாங்கிய கனத்த மனதுடனும், கண்ணீர் தோய்ந்த முகத்துடனும் மதியம் வீடு திரும்பிய அவர், தந்தைக்கான இறுதி சடங்குகளை செய்தார்.

பாராட்டு

வயதில் சிறியவராக இருந்தாலும் தந்தை இறந்த சூழலில் தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற பெரிய நோக்கத்துடன் நித்திக்ரோஷன் பொதுத்தேர்வு எழுதியது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரை ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் வெகுவாக பாராட்டி, சாதிக்க வேண்டும் என கூறி ஊக்கப்படுத்தினர்.

மேலும் செய்திகள்