கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டிற்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.
இப்பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள், 4 இணை சீருடைகள், புத்தகப்பை, வண்ண பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நில வரைபடம், கணித உபகரணப்பெட்டி, இலவச பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை, தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை, திறனறித் தேர்வு ஊக்கத் தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள், பள்ளியுடன் இலவசமாக தங்கும் வசதி போன்ற சலுகைகள் உண்டு உறைவிடப் பள்ளிகளில் வழங்கப்படும்.
பயன்பெற வேண்டும்
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.