< Back
மாநில செய்திகள்
வீரபாண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை
தேனி
மாநில செய்திகள்

வீரபாண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
24 July 2023 2:30 AM IST

வீரபாண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தேனி அருகே வீரபாண்டியில் இருந்து தப்புக்குண்டு செல்லும் சாலையில் போடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 2023-ம் ஆண்டுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. தற்போது தொழிற்பிரிவுகள் மற்றும் அதிநவீன தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. 2 ஆண்டு கால தொழிற்பிரிவு பயிற்சிகளில், பொருத்துநர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளிலும், அதிநவீன தொழிற்பிரிவில் இரண்டாண்டு கால பயிற்சி வகுப்பில் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், ஓராண்டு கால பயிற்சி வகுப்பில் தொழிற்துறை, எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர், மேம்படுத்தப்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்பவியலாளர் ஆகிய பாடப்பிரிவுகளிலும் காலியிடங்களுக்கு நேரடி மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

இதில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பில்லை, ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ 750 வழங்கப்படும். அத்துடன், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். மேலும், விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, இலவச பஸ் பயண அட்டை, சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி, பாடப்புத்தங்கள், வரைபட கருவிகள் மற்றும் மூடுகாலணிகள் போன்றவைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வர வேண்டும். இந்த தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்