< Back
மாநில செய்திகள்
மாணவர்களை கையாளுவது கத்தி மேல் நடப்பது போல் உள்ளது
மதுரை
மாநில செய்திகள்

மாணவர்களை கையாளுவது கத்தி மேல் நடப்பது போல் உள்ளது

தினத்தந்தி
|
22 Jun 2022 11:38 PM IST

பள்ளிக்கூடங்களில் மாணவர்களை கையாளுவது கத்தி மேல் நடப்பது போல இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


பள்ளிக்கூடங்களில் மாணவர்களை கையாளுவது கத்தி மேல் நடப்பது போல இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

நிர்வாகத்திறன் பயிற்சி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மதுரையில் நடந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பேசியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்த இடத்திலும் நான் அதிகாரிகளை விட்டுக்கொடுப்பதில்லை. வெறும் அமைச்சராக இருந்து செல்ல விரும்பாமல், இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எண்ணும் எழுத்தும் என்பது அரசின் கண்ணும் கருத்துமாக இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் அச்சாணிகளாக மக்கள் பிரதிநிதிகள் இருப்பது போல, நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களும் உள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் முதல்-அமைச்சர், கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என அறிவித்தார்.

கத்திமேல் நடப்பது போல

கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என அவரிடம் உறுதியளித்து உள்ளேன். அதற்கு முறையாக பயிற்சி தேவைப்படுகிறது. மரத்தை வெட்டுவதற்கு கோடரியை தீட்டுவதுதான் பயிற்சியாகும். மூளையை கூர் தீட்டியும், இதயத்தை சாணை பிடித்தும் கொள்ளுங்கள்,

அதிகாரிகளாகிய நீங்கள் கையெழுத்திடும்போது சட்டத்திற்கு உட்பட்டும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட வேண்டும். சமூகத்தை வாசிக்க பழக்குங்கள். சமூக நீதியை பின்பற்றுங்கள்.

மாணவர்களை கையாளுவது தற்போது கத்தி மேல் நடப்பது போல் உள்ளது. இதில் யாரையும் விட்டுத்தர முடியாது. ஒவ்வொரு மாணவரையும் அணுகும் முறை வித்தியாசப்படும். ஆசிரியர்கள் நண்பர்களாக, வழிகாட்டிகளாக, தாயாக, தந்தையாக இருக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி

நம்மிடம் வரும் தகரத்தை தங்கமாக மாற்ற வேண்டும். உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தும் பண்பு ஆசிரியர்களுக்கு தேவை. சமூகத்தில் புரட்சி செய்ய விரும்பினால் அதன் ஆரம்ப புள்ளி தொடக்கக்கல்வி என்று சொல்லப்படுகிறது.

தற்போது 7 நாட்கள், 4 நாட்கள் மற்றும் 2 நாட்கள் என நடந்த இந்த பயிற்சியில், 38 முதன்மைக்கல்வி அலுவலர்கள், 98 கல்வி மாவட்ட அலுவலர்கள், 67 நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்து இருக்கிறார்கள்

இவ்வாறு அவர் பேசினார். முடிவில், மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்