< Back
மாநில செய்திகள்
மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:03 AM IST

திருவரங்கம் கிராமத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

முதுகுளத்தூர்,

மதுக்கடை

முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் மதுக்கடை உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் இந்த மதுக்கடை வழியாக தான் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தம் அருகில் மதுக்கடை இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் ஒருவித தயக்கத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மதுபிரியர்களும் ஆங்காங்கே மதுபாட்டில்களை வைத்து திறந்தவெளி மதுக்கூடம் போல பயன்படுத்துகிறார்கள்.

இதனால், மதுபான கடையை அகற்ற கோரி கடந்த வாரம் பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அனைத்து கட்சியினர் போராட்டம்

அதன்படி திருவரங்கத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. முதுகுளத்தூர் ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் வினோத், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னையா சவரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அர்ஜுனன், கலைச்செல்வி ராஜசேகர், சாத்தையா, ஊராட்சி மன்ற தலைவர் அன்னபூர்ணம் பாண்டி, செல்வி காசிநாதன், அ.தி.மு.க. விவசாய அணி ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் ராமர், அ.ம.மு.க. கிளை செயலாளர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து கட்சியினரும் மதுக்கடையை அகற்ற கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்