சிவகங்கை
முன்அறிவிப்பின்றி இரவில் 5 மணி நேரம் மின்தடை தீப்பந்தங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
|முன்அறிவிப்பின்றி இரவில் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால்தீப்பந்தங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சி பகுதியின் 27 மற்றும் 28-வது வார்டில் இரவு 8 மணி அளவில் திடீரென மின்வினியோகம் தடைபட்டது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள் மிகுந்த சிரமயத்திற்குள்ளாயினர். மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர். நீண்டநேரம் ஆகியும் மின்சாரம் வராத காரணத்தால் அப்பகுதியினர், மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது பணியாளர் பற்றாக்குறை காரணமாக தற்போது வர இயலாது காலையில் தான் பார்க்க முடியும் என்று கூறிவிட்டனர். அதனை தொடர்ந்து தாசில்தாரை தொடர்பு கொண்டபோது உரிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். ஆனாலும் 8 மணியிலிருந்து 12 மணி வரை மின்சாரம் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கையில் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களுடன் சாலைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் கோட்டாட்சியரை தொடர்பு கொண்டு பேசினார். கோட்டாட்சியரின் நடவடிக்கைக்கு பின்பு நள்ளிரவு 1 மணி அளவில் மின்வினியோகம் செய்யப்பட்டது.