நாமக்கல்
மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம்
|மாசிலா அருவியை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேந்தமங்கலம்
மாசிலா அருவி
கொல்லிமலை அடுத்த அரியூர் நாடு ஊராட்சியில் கிழக்கு வளவு கிராமம் அமைந்துள்ளது. அங்கு மாசிலா அருவிப்பகுதி காணப்படுகிறது. அந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களிடம் இருந்து கிழக்கு வளவு கிராம ஆடவர் சுய உதவி குழுவினர் நுழைவு வரி வசூலித்து வந்தனர். அதில் கிடைக்கும் தொகையில் 30 சதவீதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், மீதமுள்ள 70 சதவீதத்தில் அவர்களுக்கு வருமானம் மற்றும் அருவி பராமரிப்பு செலவு ஆகியவற்றை செய்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு வனத்துறைக்கு அந்த மாசிலா அருவி ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் வனத்துறை மூலம் மாசிலா அருவி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கிழக்கு வளவு கிராம மலைவாழ் மக்களை அந்த பகுதியில் அனுமதிப்பது இல்லை என கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மாசிலா அருவிப்பகுதியை கண்காணித்து நுழைவு வரி வசூலித்து வந்த தங்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்படுவதால் மலைவாழ் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
முற்றுகை போராட்டம்
இதனால் நேற்று கிழக்கு வளவு கிராம மலைவாழ் மக்கள் மாசிலா அருவி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது 150 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், எனவே மீண்டும் தங்களுக்கு மாசிலா அருவியை ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லிமலை போலீசார் அங்கு சென்று அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து கொல்லிமலை தாசில்தார் தலைமையில் இன்னும் சில நாட்களில் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் நேற்று அங்கு பரபரப்பு காணப்பட்டது.