< Back
மாநில செய்திகள்
சாலைகள் அமைப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

சாலைகள் அமைப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
15 May 2023 10:40 AM IST

சாலைகள் அமைப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளர்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாட்டின் வேளாண் வளர்ச்சியிலும், தொழில் முன்னேற்றத்திலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதிலும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதிலும், பயண நேரத்தினை குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுவது சாலைக் கட்டமைப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சாலைக் கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில், சிறந்த சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பது, புதிய சாலைகளை அமைப்பது, ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவது ஆகியவற்றை முனைப்புடன் செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உண்டு. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதைப் பார்க்கும்போது, இந்தப் பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

உதாரணமாக, சென்னை மணப்பாக்கம் நெடுஞ்சாலை என்பது ராமாபுரத்தையும் - குன்றத்தூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாகும். கிட்டதட்ட 8 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதிகள் பாதாள சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாகவும், ஓராண்டிற்கும் மேல் இப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக, இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்த பகுதிகளில்கூட சாலைகள் போடப்படவில்லை என்றும், இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வது அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து என்றும், இந்தச் சாலையில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள் வர மறுக்கின்றனர் என்றும், அப்படி வந்தாலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களும், அப்பகுதி வழியாக செல்பவர்களும் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, பெரும்பாலான இடங்களில் புதிய தார்ச் சாலை போடுவதற்காக சாலையின் மேற்பரப்புகள் அகற்றப்படுகின்றன. முகப்பேரிலுள்ள பாரி சாலை, ஜமாலியாவிலுள்ள ஹைடர் கார்டன் தெரு, மயிலாப்பூர் பி.எஸ். சிவசாமி சாலை, மணப்பாக்கத்தில் உள் புறத்தில் உள்ள சாலைகள் உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் மேற்பரப்புகள் அகற்றப்பட்டு பல நாட்களாகியும் புதிய தார்ச் சாலை போடப்படாத நிலை நிலவுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதற்குக் காரணம் ஆட்கள் மற்றும் இயந்திரங்களை குறித்த நேரத்தில் ஒப்பந்ததாரர்களால் எடுத்துவர இயலவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், ஒரே ஒப்பந்ததாரர் சாலைகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் பல காரணமாக, இயந்திரங்களின் வாடகையினை சேமிக்கும் வகையில், முதலில் சாலைகளின் மேற்பரப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வதாகவும், அவர்களிடம் புதிய சாலையைப் போடுவதற்கான இயந்திரங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இருப்பதால் புதிய சாலைகள் போடுவதில் தொய்வு ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஓரிரு இயந்திரங்களை வைத்துக் கொண்டு பல சாலைகளுக்கான பணிகளை ஒரே ஒப்பந்தக்காரர் மேற்கொள்ளும்போது இது போன்ற தாமதங்கள் ஏற்படுகின்றன. ஒப்பந்தப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கும் முன்பே அவர்களிடம் போதுமான ஆட்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ளனவா என்பதையறிந்து கொண்டு ஒப்பந்தங்களை அளித்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாததன் காரணமாக சாலைப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மக்களும், வாகன ஓட்டிகளும்தான். மக்களின் சிரமங்களை வெகுவாக குறைக்கும் வகையில், ஒரு சாலைப் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும்போது, ஒவ்வொரு பணியும் குறித்த காலத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விரைந்து முடிக்கவும், மணப்பாக்கம் நெடுஞ்சாலையை உடனடியாக சீர்செய்யவும் முதல்-அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்