ராமநாதபுரம்
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
|வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம்,
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ராமேசுவரம் பகுதியில் 2-வது நாளாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 400-க்கு மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலும் 700-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 100 விசைப்படகும் மீன் பிடிக்க செல்லவில்லை.
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதுபோல் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக பாம்பன் தென்கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருவதால் கரையோரத்தில் உள்ள குடிசை வரையிலும் கடல் நீர் வந்து செல்கிறது.