காஞ்சிபுரம்
குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
|குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி எச்சரித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் தேசிய கொடியை ஏற்றி குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால் காஞ்சீபுரம் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலக எண் 044-27237175 மற்றும் 7402606005 போன்ற தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.