வேலை நிறுத்த போராட்டம்: மருத்துவர்களுக்கு மருத்துவ இயக்ககம் அறிவுறுத்தல்
|கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் (முதுநிலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரம் தொடர்பாக நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மருத்துவத்துறை இயக்ககம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
அதில், நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராடத்தில் ஈடுபட வேண்டும். அவசர கால சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை எவ்விதமான பாதிப்பு ஏற்படாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை (சனிக்கிழமை) கூடுதலாக மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும். நோயாளிகளை பாதிக்காதவாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.