திருநெல்வேலி
நெல்லையில் சாலைகளை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும்-நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
|நெல்லையில் சாலைகளை சீரமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லையில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.62 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, கழிவுநீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. 20 நாட்களுக்குள் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன். நெல்லை டவுன், பேட்டை பகுதி போக்குவரத்து நெரிசலை தீர்க்க பேட்டை ரெயில்வே கேட் முதல் மேலப்பாளையம் வரையிலான இணைப்பு சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் கோரிக்கை வைக்க இருக்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 மடங்கு பணம் புழக்கத்தில் இருந்துள்ளது. தமிழகத்தில் மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதே கிடையாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் நெல்லை தொகுதியில் டவுன் பாட்டபத்து உள்ளிட்ட மாநகர பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.