< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் ஜி20 மாநாட்டையொட்டி புராதன சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தீவிர கட்டுப்பாடு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் ஜி20 மாநாட்டையொட்டி புராதன சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தீவிர கட்டுப்பாடு

தினத்தந்தி
|
19 Jun 2023 1:38 PM IST

மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புராதன சின்னங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே புராதன சிற்பங்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

ஜி20 மாநாடு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய சுற்றுலா தலமாக திகழ்வதால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகிறது. அதனால் சர்வதேச நாடுகளின் கவனத்தை மாமல்லபுரம் ஈர்த்துள்ளது.

இங்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற்றுள்ள நிலையில் மகளிர் ஜி20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மற்றொரு ஜி20 மாநாடு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி புதன்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

தீவிர கட்டுப்பாடு

இந்த மாநாட்டையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அந்தந்த முகப்பு வாயில்களில் மெட்டல் டிமெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பைகள், உணவு பொருட்கள் போன்றவை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் நகரின் முக்கிய தெருக்களில் 5 போலீசார் வீதம் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்