< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் சென்னை போலீசாருக்கு கடும் கட்டுப்பாடுகள்: சாட்டையை சுழற்றும் கமிஷனர்
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் சென்னை போலீசாருக்கு கடும் கட்டுப்பாடுகள்: சாட்டையை சுழற்றும் கமிஷனர்

தினத்தந்தி
|
30 April 2024 9:21 AM IST

உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை,

ஒழுக்க சீர்கேடுகளை தடுக்கும் வகையில் சென்னையில் ஆண்-பெண் போலீசாருக்கு கடும் கட்டுப்பாடுகள் வர உள்ளது. சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்காக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சாட்டையை சுழற்றி கடும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

'ஸ்காட்லாந்து யார்டு' போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.

இன்னொரு உயர் அதிகாரி மீது பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இது போல் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீசிடம் செல்போனில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

இது போன்ற ஒழுக்க சீர்கேடுகள் திறமைவாய்ந்த தமிழக போலீசுக்கு களங்கம் போன்று எழுந்து நிற்கிறது. இதுபோன்ற களங்கத்தை துடைத்து சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இறங்கி உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தனக்கே உண்டான பாணியில் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கைகளில் இறங்க போகிறாராம். இதற்காக ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கவும் கமிஷனர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ்துறையில் பணியில் இருக்கும்போது போலீசார் என்னனென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

பணி நேரத்தில் போலீசார் செல்போனில் பேசுவதற்கும், 'வாட்ஸ்-அப்' போன்ற தகவல்களை பார்ப்பதற்கும் தடை உள்ளது. பெண் போலீசார் சீருடை அணிந்து பணியில் இருக்கும் போது தலையில் பூ வைப்பது போன்ற அதிக அலங்காரங்களை செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் கட்டுப்பாடு உள்ளது. பெண் போலீசார் அதிக 'மேக்கப்' போடாமல் தலை முடியை வலை கொண்டையிட்டு மிடுக்காக வரவேண்டும் என்ற அறிவுரைகள் செயல்பாட்டில் உள்ளன.

பெரும்பாலான பெண் போலீசார் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்துதான் வருகிறார்கள். அதையும் மீறி ஆண்-பெண் போலீசார் ஒன்றாக பணி செய்யும் போது காதல் தீ பற்றிக்கொண்டு அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. பணியில் இருக்கும் போது இது போன்ற செயல்களால் ஆண்-பெண் போலீசாரின் கவனங்கள் சிதறுகின்றன என்ற புகாரும் எழுகிறது.

தமிழக போலீசில் 35 ஆயிரம் பெண் போலீசார் உள்ளனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக கூட மாற வாய்ப்புள்ளது. ஆண் போலீசுக்கு இணையாக பெண் போலீசாரும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் மிடுக்காக பணியாற்றுகிறார்கள்.

கடந்த 19-ந் தேதி அன்று சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தபோது ஆண் போலீசாருக்கு இணையாக பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடிகர்-நடிகைகள் ஓட்டுப்போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வந்த போது சில போலீசார் தங்களது கடமையை காற்றில் பறக்கவிட்டனர்.

நடிகர்-நடிகைகளை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு போட்டி போட்டார்கள். குறிப்பாக நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த போது தனது கடமையை மறந்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவருடன் 'வீடியோ' படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டினார்.

இந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது போல நடிகர்-நடிகைகளுடன் புகைப்படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டிய போலீசார் யார்-யார்? என்று விசாரணை நடக்கிறது.

பணியில் இருக்கும் போது ஒழுக்கத்தை காப்பதில் பெண் போலீசார் மட்டும் அல்லாமல், ஆண் போலீசாரும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை போலீசில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் விரும்புகிறார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காப்பதில் சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது போன்ற முயற்சியில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரும் ஈடுபட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சாட்டையை சுழற்றி கடும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக சென்னை போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பணியில் இருக்கும் போது ஆண்-பெண் போலீசார் ஒழுக்கத்தை காப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து அறிவுரைகள் வழங்கும் பயிற்சி முகாம் ஒன்றும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடிந்தவுடன் இந்த பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழக போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், அவர் காட்டிய வழியில் சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும், அதில் வெற்றியும் பெற்றுள்ளோம் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள்-குழந்தைகளுக்கு பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்றும், அதோடு போலீசில் ஒழுக்க சீர்கேடுகள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்