< Back
மாநில செய்திகள்
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
11 Dec 2023 1:28 PM IST

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் தொகுப்பு அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில்தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2021-ம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 4,415 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2022-ம் ஆண்டில் 4,906 வழக்குகளாக அதிகரித்திருக்கிறது. அதேபோல், பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 5,026 ஆக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளில் 3,621 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 1,008 பெண் குழந்தைகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். 367 சிறுமிகள் பாலியல் சார்ந்த தொடர் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.பெண்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதை எந்த மாநிலம் உறுதி செய்கிறதோ, அந்த மாநிலம்தான் நல்லாட்சி நடத்தும் மாநிலம் ஆகும். ஆனால், தமிழ்நாடு அந்தப் பெருமையைப் பெறுவதற்கு தவறி விட்டது.

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உத்தர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நான்காவது மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருக்கிறது.

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தோல்விதான் இந்த அவப்பெயருக்கு காரணம் ஆகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததற்கான முதன்மைக் காரணம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டங்களின்படி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அவை எதுவுமே செய்யப்படாததுதான்.

அடுத்ததாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாக கைது செய்யப்படுவோம்; வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாததுதான். அரசு மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மைதான் இவற்றுக்கு காரணமாகும். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா போதைப் பழக்கம் பெண்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கஞ்சா தாராளமாக கிடைப்பதால், சிறுவர்கள் முதல் அனைவரும் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்