கோயம்புத்தூர்
பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
|பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் புகார் கொடுக்கும்போது பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கோவை
பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் புகார் கொடுக்கும்போது பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அனுமதிப்பது இல்லை
கோவை மாநகர போலீஸ் சார்பில், பெண்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து கியூ ஆர் கோடு மூலம் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரில் இரவு நேரங்களில் பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பெண்களின் கருத்துக்களை கேட்டறிய டிஜிட்டல் முறையில் கியூ ஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்படம் பெண்கள் இந்த கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பெண்கள் கருத்து தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் அக்கா திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். மேலும் பள்ளிகளுக்கு சென்று பாலியல் குற்றம் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் சில தனியார் பள்ளிகள் ஏதோ ஒரு காரணத்தை கூறி போலீசாரை விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதிப்பது இல்லை.
பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கையயும் எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு கடமை உள்ளது. இது தொடர்பாக மாணவிகள் புகார் தெரிவித்தால் அதை உடனடியாக காவல்துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் குற்றங்களை மறைக்க உதவுவதாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை
கடந்த வாரத்தில் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிக்கும் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்த சென்றபோது பள்ளி நிர்வாகம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து உள்ளனர். அந்த பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அந்த மாணவி பள்ளி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்து உள்ளாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். அவ்வாறு அந்த மாணவி புகார் தெரிவித்து இருக்கும் பட்சத்தில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தால் அந்த பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் மாணவிகள், போலீசார்உள்பட பலர் கலந்து கொண்டனர்.