பெரம்பலூர்
அரசு நிலங்கள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை
|பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு நிலங்கள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1,000 மரக்கன்றுகள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ராமலிங்கபுரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் மூலம் புஜங்கராயநல்லூர் ரசுலாபுரம் இடையே மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் கீழ் பகுதியில், மருதையாற்றில் சிலர் ஆக்கிரமித்து பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்டு மரக்கன்றுகளை நட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில், நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பயனாளிகளைக் கொண்டு, வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
ஆக்கிரமிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோரிடமிருந்து நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சில நிலங்களில் விவசாயிகள் பயிர்களை விதைத்துள்ளனர். பயிர்களும் ஒரு உயிர்தான் என்பதை கருத்தில் கொண்டு, தற்போது விவசாயம் செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கான விளைச்சல் கண்ட பிறகு, இந்த இடத்தை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மீண்டும் இந்த இடத்தில் விவசாயம் செய்ய மாட்டோம் என்றும் சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
அரசின் நிலத்தையோ, நீர்வழித்தடங்களையோ ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி விட வேண்டும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், வனச்சரகர்கள் பழனிகுமரன், முருகானந்தம், ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.