கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
|கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருடாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த கொடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தரமான உயர் சிகிச்சை வழங்கிடுவதோடு, உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஏற்கனவே கள்ளச்சாராயம் விற்பதும், அதனால் ஏழை கூலித் தொழிலாளிகள் உயிரிழந்ததும், பாதிப்பு ஏற்பட்டதும் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில் காவல்துறையின் மெத்தனம் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு ஆகியவை இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய காவல்துறையினர் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிலக்கு தனிப்பிரிவை தீவிரப்படுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.