< Back
மாநில செய்திகள்
மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
19 Jun 2024 6:57 PM IST

மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரம்புமீறி சட்டவிரோதமாக மணல் கடத்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சி என்றாலே, "மணல் கொள்ளை", "ரேஷன் அரிசி கடத்தல்", "வெடிகுண்டு கலாச்சாரம்", "கொலை, கொள்ளை", "பாலியல் துன்புறுத்தல்", "போதைப் பொருள் விற்பனை" ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிவார்கள். அதுவும் கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரம்புமீறி சட்டவிரோதமாக மணல் கடத்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், சட்டவிரோதமாக மணல் எடுப்பதை உடனே நிறுத்தும் வகையில், மணல் குவாரிகளை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள 2003-ம் ஆண்டு ஆணையிடப்பட்டது. இதனை மாற்றி அமைக்கும் வகையில், மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுத்து விற்பனை செய்ய ஒப்பந்தப் புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் மூலம் நடத்த முந்தைய தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது, மணல் குவாரிகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தாலும், மணல் குவாரிகளிலிருந்து சட்டவிரோதமாக அளவுக்குமீறி மணல் அள்ளப்படுவதாகவும், இதன்மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் புகார்கள் எழுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதில், 4,500 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதையடுத்து, பத்து மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சட்ட விரோத மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு தமிழ்நாடு அரசு ஏன் வழக்கு தொடர்ந்தது என்று வினவியதுடன், மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்ததிலிருந்தே, ஆளும் கட்சியினரின் அமோக ஆதரவுடன் மணல் கொள்ளை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில், மணல் கொள்ளையை தடுத்ததற்காக, வெட்டிக் கொல்லப்பபட்ட சம்பவம், படுகாயமடைந்த சம்பவம், கொலை முயற்சி சம்பவம் போன்றவை அரங்கேறியுள்ளன. அந்த வகையில், அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வளையப்பட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற கோட்டாட்சியர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் கோட்டாட்சியர் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் நிலையில் இருக்கும் அரசு அதிகாரியையே கொலை செய்ய மணல் கொள்ளையர்கள் முயற்சிக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது. ஆளும் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் இதுபோன்ற கொலை முயற்சி நடைபெற்றிருக்காது. மணல் கொள்ளையை ஊக்குவிக்கக்கூடிய, மணல் விலையை உயர்த்தக்கூடிய, அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தக்கூடிய செயலில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன், நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனி வருங்காலங்களில் மணல் கொள்ளை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்றும் முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்