< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவன் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

பள்ளி மாணவன் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
11 Aug 2023 8:49 PM IST

கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவை கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரியில் பள்ளி மாணவன் தம்பி சின்னத்துரையும், அவரது தங்கையும் சாதிவெறியர்களால் வீடுபுகுந்து தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் சிலரால் சாதியப்பாகுபாடு காட்டப்பட்டு அவமதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததால் தம்பி சின்னத்துரை மீதும், தடுக்க வந்த அவரது தங்கை மீதும் கொலைவெறித்தாக்குதல் தொடுக்கப்பட்டு, இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், இத்தாக்குதலின்போது அதிர்ச்சி தாளாது அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் இறந்துபோனதுமான கோர நிகழ்வுகள் பெரும் மனவேதனையளிக்கின்றன.

ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய அறிவுக் கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே சாதியரீதியாகப் பாகுபாட்டுணர்வு காட்டப்படுவதும், அதன்விளைவாக கொடும் வன்முறை ஏவப்பட்டதுமான நிகழ்வுகள் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன. பள்ளி, கல்லூரி எனும் கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவை கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும். "ஒழுக்கத்தின் மூலமான உயர்ந்த குணங்களும், செயல்பாடுகளும்தான் பெருமையே ஒழிய, சாதியல்ல" என்கிறார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அப்படி, ஒழுக்கத்தினாலும், உயர்ந்த குணத்தினாலும், கல்வித்திறனாலும் சிறந்த மாணவனாக விளங்கிய தம்பி சின்னத்துரையை சாதியத்தினைக் கொண்டு தாழ்த்த முற்படுவதும், ஒடுக்க நினைப்பதும், அதன் நீட்சியாக வன்முறையை ஏவிவிட்டதுமான கொடுங்கோல் போக்குகள் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் சாதிவெறியோடு கொலைவெறித்தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், தம்பி சின்னத்துரைக்கும், அவரது தங்கைக்கும் உயரிய சிகிச்சை அளித்து, அவர்கள் மீண்டுவரவும், கல்வியினைப் பாதுகாப்பாகத் தொடரவும் வழிவாய்ப்புகளைச் செய்துதர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்