< Back
மாநில செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
29 Dec 2022 11:14 PM IST

பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பரிசுடன் கரும்பு

கடலூரில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சுமார் 5,600 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் மட்டும் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசியுடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி 2 கோடியே 16 லட்சம் ரேஷன் அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட உள்ளது.

கலெக்டர் மூலம் கண்காணிப்பு

மேலும் பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் கடந்த காலங்களில் இடைத்தரகர்கள் புகுந்து விளையாடினர். அதனால் தற்போது கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களை தவிர்க்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பன்னீர் கரும்புகள் எந்தெந்த பகுதியில் கொள்முதல் செய்யப்படும் என்பதை கூட்டுறவுத்துறை, வேளாண் துறை தான் முடிவு செய்யும். கரும்பு கொள்முதல் செய்வது கலெக்டர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

உண்மையான விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்