3-ம் நபர்களிடம் இருந்து பரிசு பொருள்கள் வாங்கினால் கடும் நடவடிக்கை - நீதிபதிகளுக்கு ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எச்சரிக்கை
|கீழமை கோர்ட்டு நீதிபதிகள், 3-ம் நபர்களிடமிருந்து பரிசு பொருட்களை வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
சென்னை,
கீழமை கோர்ட்டு நீதிபதிகள், மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசு பொருட்களை வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில நீதிபதிகள், பண்டிகை காலங்களில் மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசுப்பொருள், பட்டாசு, இனிப்பு பெறுவதாக பதிவுத்துறையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சில நீதிபதிகளின் இச்செயல், மாநிலத்தின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தலைமை பதிவாளர் தனபால் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் அனைத்து நீதிபதிகளும் பரிசு பொருட்கள், பட்டாசுப் பெட்டிகள், இனிப்புப் பெட்டிகள் போன்றவற்றைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நீதித்துறையில் பணிபுரியும் போது கடுமையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அறிவுரைகளை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.