கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி அதிரடி
|சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக வட சென்னை பகுதியில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஓட்டேரி நல்லா கால்வாயில் முறையாக தண்ணீர் செல்லாத காரணத்தால்தான் இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த கால்வாயை தொடர்ந்து தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
இதுதொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது ஓட்டேரி நல்லா கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் தண்ணீர் செல்வது தடைபடுவது தெரியவந்தது.
இந்நிலையில், பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (நவ.9) நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் ஓட்டேரி நல்லா கால்வாயில் குப்பைகளை கொட்டப்படுவது குறித்து கூடுதல் தலைமை செயலாளர், மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், கால்வாய்களில் குப்பைகளை கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றனர். இதைக் கேட்ட கூடுதல் தலைமை செயலாளர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.