< Back
மாநில செய்திகள்
ராமேசுவரத்தில் அனுமதி பெறாத படகுகள் மீது கடும் நடவடிக்கை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரத்தில் அனுமதி பெறாத படகுகள் மீது கடும் நடவடிக்கை

தினத்தந்தி
|
22 July 2023 6:45 PM GMT

ராமேசுவரத்தில் அனுமதி பெறாத போலி பதிவு எண் கொண்ட விசைப்படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் எச்சரித்தார்.

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் அனுமதி பெறாத போலி பதிவு எண் கொண்ட விசைப்படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் எச்சரித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மீன்துறை துணை இயக்குனர் பிரபாவதி மற்றும் உதவி இயக்குனர்கள் கோபிநாத், ஜெயக்குமார், அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்களும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் பேசியதாவது:-

ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வைத்துள்ள மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1,800 லிட்டர் மானிய டீசல் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய டீசலை உடனடியாக மீனவர்களுக்கு வழங்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைக்க இங்கு பெயரளவில் மட்டுமே துறைமுகம் உள்ளது.

இதனால் எங்களுக்கு கொச்சின் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்து தொழில் செய்ய மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தர வேண்டும். இறால் மீனுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து கம்பெனிக்காரர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு மீனவர்களை வஞ்சித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிலோ ரூ.750 விலை போகும் நிலையில் தற்போது ரூ.450-க்கு மட்டுமே வாங்குகின்றனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தூர்வார வேண்டும்

பாம்பன் கால்வாய் பகுதி மண் மேடாகி சிறிய படகு கூட செல்ல முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் தென்கடல் மீனவர்கள் மீன்பிடிக்க வேறு இடத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பாம்பன் கால்வாயை அரசு தூர்வார வேண்டும்.

ராமேசுவரத்தில் அனுமதி இல்லாத, போலி பதிவெண், இரட்டை பதிவெண் கொண்ட படகுகள் அதிகளவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் பெயரளவில் மட்டுமே ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக கடந்த முறை ஆய்வு செய்தபோது இரண்டு பதிவு கொண்ட படகுகளும், போலி பதிவெண் கொண்ட படகும், அனுமதி பெறாத படகுகளும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மீன்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து அனுமதி பெறாத படகுகள் மீது நடவடிக்கை எடுத்து ராமேசுவரத்தில் உள்ள படகுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

நடவடிக்கை

இதை தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் பதிலளித்து பேசியதாவது:-

ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு அவர்கள் வங்கி கடனை செலுத்தாததே காரணமாகும். உடனடியாக வங்கி கடனை செலுத்தினால் டீசல் மானியம் வழங்க உத்தரவிடப்படும். இறால் மீன் உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ராமேசுவரத்தில் அனுமதி பெறாத படகுகளை மீண்டும் ஆய்வு செய்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. பதிவெண் பெறாத போலி பதிவில் உள்ள படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் பாரபட்சம் காட்டப்படாது. முதல் முறை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே தவறை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்