திருவள்ளூர்
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
|பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த 11-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது குறித்து சோதனை மேற்கொண்டதில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 640 மதிப்புள்ள 184.660 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் மாவட்ட மற்றும் மாநில எல்லையில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 182 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களுக்கும் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்தார். மேலும் பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குண்டர் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.