புதுக்கோட்டை
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை-வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை
|தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்காலிக தடை
கடந்த 2017-18-ம் ஆண்டில் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மையால் விவசாயிகள் உயிரிழந்ததாகவும், எலிகளை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரடோல்பேஸ்ட்) பூச்சிக்கொல்லி மருந்து தற்கொலை மரணங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேளாண்மை உழவர் நலத்துறையால் அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி தற்போது மோனோகுரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர்பைரிபாஸ், ப்ரோபெனோபோஸ் + சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் + சைபர்மெத்ரின் ஆகிய 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றிற்கு 1-3-2023 முதல் 29-4-2023 வரை 60 நாட்களுக்கு தற்காலிக தடையும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரடோல் பேஸ்ட்) கொண்ட எலி விஷம் மருந்திற்கு நிரந்தர தடையும், தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி, இருப்பு, வினியோகம் மற்றும் விற்பனை பயன்படுத்துவதை தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். வட்டாரங்களில் உள்ள அனைத்து பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தடையை மீறும் பட்சத்தில் ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விற்பனை தடை விதிக்கப்படும்.
மேலும் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பில் உள்ள தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளுக்கு விற்பனை தடையாணை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.