< Back
மாநில செய்திகள்
போலி கால்நடை மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை-மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போலி கால்நடை மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை-மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
4 Sept 2023 12:00 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செயற்கை முறை கருவூட்டல்

"கால்நடை மருத்துவ பேரவை" எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. அவ்வாறு பதிவு பெறாமல் சிகிச்சையளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல். போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.

பெரம்பலூர் மாவட்டத்தில், சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது. அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவர்கள்.

போலி மருத்துவர்கள்

எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட பதிவு பெற்ற மருத்துவர்களை மட்டுமே பொதுமக்கள் அணுக வேண்டும். கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்த தகவல் அறிந்தால், அருகே உள்ள கால்நடை மருந்தகங்கள், போலீஸ் நிலையத்திலும் தெரிவிக்க வேண்டும். கால்நடை மருத்துவ பேரவையில் பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு மட்டுமே மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்யப்பட வேண்டும்.

பிற துண்டு சீட்டுகளிலோ, மருத்துவர் எனக்கூறி பதிவு எண் போடாமல் வரும் மருந்து சீட்டுகளுக்கோ மருந்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். போலி மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி முதல் முறை ரூ.1,000 அபராதமும், 2-வது முறை ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்