திருவள்ளூர்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
|போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தல் என்பது மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருத்தணி உட்கோட்ட காவல்துறையின் சார்பில், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து 4 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான பதாகைகள் பொருத்திய இந்த பேரணியானது சித்தூர் சாலை, கடப்பா டிரங்க்ரோடு வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
விழிப்புணர்வு பேரணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் பேசியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருத்தணியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொதுமக்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருத்தணி உட்கோட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணியில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ், நகர செயலாளர் வினோத்குமார், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் நாகன், கவுன்சிலர் ஷியாம்சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.