திருவள்ளூர்
போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
|போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவி்த்தார்.
திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் மாவட்டம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்கள் மூலமாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் சமூகத்தில் நன்கு படித்து நல்ல ஒழுக்கம் உள்ள மாணவர்களாக விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்- இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.