கோயம்புத்தூர்
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
|பொள்ளாச்சியில் அரசுக்கு சொந்தமான ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அரசுக்கு சொந்தமான ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஓடை ஆக்கிரமிப்பு
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது பொள்ளாச்சி நகராட்சி மரப்பேட்டை அருகில் பொட்டுமேடு பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், இந்த பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஓடை உள்ளது. இந்த ஓடை கள்ளிப்பாளையம் முதல் சின்னாம்பாளையம், பொட்டுமேடு, மரப்பேட்டை பாலம் வழியாக ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் கலக்கிறது. ஆனால் தனியார் ஒருவர் ஓடை தனக்கு சொந்தம் என்று கூறி ஆக்கிரமித்து வேலி அமைக்கிறார். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் வந்து விடும். எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மதுக்கடையை அகற்ற வேண்டும்
வெள்ளாளபாளையம் ஊராட்சி மக்கள் கொடுத்த மனுவில், பொள்ளாச்சி-பல்லடம் ரோடு கரப்பாடி பிரிவில் டாஸ்மாக் கடை அமைந்து உள்ளது. இந்த கடையால் மாணவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊருக்கு வரும் வழியில் அமைந்து உள்ளதால், அங்கு அமர்ந்து மதுப்பிரியர்கள் மது அருந்துவது, தகாத வார்த்தைகளால் பேசுவது, தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படுவதோடு, வழிப்பறி போன்றவையும் நடக்கின்றன. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.