திண்டுக்கல்
திண்டுக்கல்லில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?; நடைபயிற்சி செய்வோர் கருத்து
|திண்டுக்கல்லில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா? என்பது குறித்து நடைபயிற்சி செய்வோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெருநாய் பிரச்சினை ஏதோ தெருவில் உள்ள பிரச்சனையாக இல்லாமல் இன்றைக்கு தேசிய பிரச்சனையாகவே உருமாறி இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 12 பேர், தெருநாய் கடிக்கு அல்லது துரத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அபரிமிதமான இனப்பெருக்கம்
தெருநாயின் சராசரி வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். 10 முதல் 12-வது மாதத்திலேயே நாய்கள் கருத்தரிக்கும் நிலையை அடைந்து விடுகிறது. ஒரு நாய் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சம் 16 குட்டிகள் போடும். இதனால் நாய்கள் இனப்பெருக்கம் அபரிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லும் நிலை இருந்தது. காலப்போக்கில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலும், விலங்கு நல வாரியத்தின் எதிர்ப்பாலும் நாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டு, கருத்தடை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முன்பு நாய்களை சுறுக்கு வலை மூலம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர். அப்போது கழுத்து இறுக்கி நாய்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதால், தற்போது வலை மூலம் நாய்கள் பிடிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு அச்சுறுத்தல்
தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடைபயிற்சி செய்பவர்கள்தான். எந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் டாக்டர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை, 'தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்' என்பதுதான்.
அதன்படி, திண்டுக்கல்லில் ரவுண்டு ரோடு, சிலுவத்தூர் ரோடு குளம், கோபாலசமுத்திரக்கரை, முத்துசாமிகுளம், மாவட்ட விளையாட்டு மைதானம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் விலை உயர்ந்த நாய்களையும் நடைபயிற்சி செல்லும் போது தங்களுடன் அழைத்து வருகின்றனர்.
இப்படி ஆர்வமுடன் நடைபயிற்சிக்காக வருபவர்களுக்கு தெருநாய்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றன. தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் மறுபுறம் தெருநாய்களும் கொடுமைகளுக்கு உள்ளாகின்றன என்று விலங்குகள் நல அமைப்பினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
தொற்று பரவும் அபாயம்
சிவாஜி (ரவுண்டு ரோடு வாக்கர்ஸ் கிளப் ஆயுட்கால உறுப்பினர், என்.ஜி.ஓ. காலனி, திண்டுக்கல்):- திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு நல்ல அகலமான சாலை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் நிம்மதியாக நடைபயிற்சி செய்கிறார்களா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். தினமும் நடை பயிற்சி செய்வதற்காக ஏராளமானோர் வருகின்றனர். அவர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன.
மேலும் தெருநாய்களில் பல நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிகின்றன. அவை கடித்தால் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதோடு தெருநாய்கள் துரத்துவதால் வேகமாக நடக்க விரும்புபவர்கள் மெதுவாக நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. அவைகளை விரட்ட நினைத்தால் தெருநாய்களை துன்புறுத்துகிறோம் என்று புளுகிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கின்றன. இதனால் நடைபயிற்சி செய்பவர்கள் தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கின்றனர்.
தீர்வு கிடைக்கவில்லை
லோகநாதன் (வியாபாரி, ஸ்பென்சனர் காம்பவுண்டு, திண்டுக்கல்):- நான் கடந்த சில ஆண்டுகளாக சிலுவத்தூர் ரோடு குளப்பகுதியில் நடைபயிற்சி செய்து வருகிறேன். அங்கு தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் போதெல்லாம் அதிகாரிகள் வந்து நாய்களை பிடித்து செல்கின்றனர். ஆனால் அவைகளுக்கு கருத்தடை செய்து, மீண்டும் இங்கேயே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர்.
இதனால் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. காலை, மாலை நேரத்தில் அப்பகுதியில் நடை பயிற்சி செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ரவுண்டு ரோடு உள்ளிட்ட பிற சாலைகளில் நடைபயிற்சி செய்யலாம் என்றால் அங்கு சாலையோரத்தில் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமல் உள்ளன. இதனால் அங்கு நடைபயிற்சி செய்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
தொல்லை இல்லை
ஹரிஷ் (அரவை மில் உரிமையாளர், பழனி):- பழனி நகர் பகுதியில் அதிகாலையில் நடை பயிற்சி செய்வேன். அப்போது சாலையில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரியும். அந்த நாய்களுக்கு நான் 'பிஸ்கட்' வாங்கி போடுவேன். இதனால் தெருநாய்கள் என்னிடம் பழகிவிட்டன. அதேபோல் அந்த தெருவை சேர்ந்தவர்களையும் அடையாளம் கண்டு வைத்திருக்கின்றன.
வீடுகளுக்கு பாதுகாவலான வளர்ப்பு நாய்கள் இருப்பதை போல தெருவுக்கு பாதுகாவலன்களாக தெருநாய்களே உள்ளன. இரவில் ஒரு தெருவில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிந்தால் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வருபவர்கள் அந்த தெருவுக்குள் நுழைய அச்சப்படுவார்கள். எனவே திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே தெருநாய்களால் அந்த தெரு மக்களுக்கு தொல்லை இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஆர்வம் குறைந்து வருகிறது
சரோஜா (குடும்ப தலைவி, அண்ணாநகர், நத்தம்):- எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் காலை, மாலை நேரங்களில் ஆர்வமாக நடைபயிற்சி செய்வார்கள். அப்போது அங்கு கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பெண்களை துரத்தி வந்து அச்சுறுத்துகின்றன. இதனால் நடை பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது.
சில பெண்கள் காலையில் நடை பயிற்சி செய்வதை தவிர்த்துவிட்டு மாலையில் மட்டுமே நடை பயிற்சி செல்கின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து அகற்றலாம். அல்லது அவைகளுக்கு கருத்தடை செய்து வேறு இடங்களில் கொண்டு சென்று விடலாம்.
விபத்து ஏற்படும் அபாயம்
தெய்வானை (குடும்ப தலைவி, அனுமந்தநகர்):- தினமும் நடைபயிற்சி செய்வதால் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது என்பதால் தான் நடைபயிற்சி செய்கிறேன். தினமும் குறைந்தபட்சம் 2 கிலோ மீட்டர் ஆவது நடைபயிற்சி மேற்கொள்வேன். சில நேரங்களில் நடைபயிற்சி செய்யும் போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களை தெருநாய்கள் துரத்தும். அப்போது பதற்றமடையும் அவர்கள் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வருவதை பார்க்கும் போது பீதி ஏற்படுகிறது.
எங்கே நம் மீது மோதி விடுவார்களோ என்ற பதற்றத்தில் சாலையோரத்துக்கு ஓடிச்சென்றுவிடுவேன். ஆனால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் பதற்றத்தில் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நிம்மதியாக நடைபயிற்சி செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.