சென்னை
வடகிழக்கு பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் உத்தரவு
|வடிகால் பணிகளை தாமதமாக முடிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும், தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட வேண்டும். தாமதமாக பணிகளை முடிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.