சென்னை
திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக முடிக்கப்படாத மழைநீர் கால்வாய் பணி - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
|திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படாததால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 4-வது வார்டில் கடந்த 2 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் இணைப்பு இல்லாமல் துண்டு துண்டாக கட்டப்பட்டு பல மாதங்களாக பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் மண்டல அலுவலரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் முடிக்காமல் உள்ள மழைநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் கவுன்சிலர் ஜெயராமன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் மழைநீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது தெரிந்தது. உடனடியாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் உத்தரவிட்டார். அப்போது செயற்பொறியாளர் தணிகைவேல், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.