தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை
|கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டின் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கடல் சீற்றத்துக்கான (கள்ளக்கடல்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியாக காணப்படும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்' நிகழ்வு என்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு இதேபோல தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான (கள்ளக்கடல்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரையிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பொறுத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரையும் கடல் அலை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை இதுபோன்ற கடல் சீற்ற நிகழ்வை பொருட்படுத்தாமல் கடலில் குளிக்கச் சென்ற சிலர் அலையில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.