< Back
மாநில செய்திகள்
குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
மாநில செய்திகள்

குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

தினத்தந்தி
|
1 April 2024 11:13 AM IST

கடல் சீற்றத்தால் அச்சமடைந்த கடற்கரையோர பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கடல் சீற்றத்தின் போது கடல்நீர் ஊருக்குள் புகுவதும், வீடு உள்ளிட்ட கட்டிடங்களை அடித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் குமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் சுமார் 10 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் மோதி சிதறின. கடல் சீற்றத்தால் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதுபோல் சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதேபோல், கொல்லங்கோடு இரையுமன்துறை, மிடாலம், இனயம் சின்னத்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச் சுவரை கடந்து கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் அச்சமடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.

இந்த நிலையில், குமரியில் இன்று மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால் அச்சமடைந்த கடற்கரையோர பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடல் சீற்றத்தால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை கடல் அலை இழுத்து சென்றது. இதனால் அவை சேதமடைந்தன. மேலும் ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்