வங்கக்கடலில் இன்று உருவாகிறது 'மிதிலி' புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!
|இந்த புயலுக்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இது புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் இன்று புயல் உருவாகக்கூடும் என்றும், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது. மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கரையை கடக்கும்போது மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு- வடகிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோரம், மேற்கு வங்கம், வங்கதேச கடலோரம், இலங்கை கடலோரம் மற்றும் அதனை ஒட்டியதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரம் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.