மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம்
|மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளன.
சென்னை,
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் 1.14 கோடியில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. "சேதமடைந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்" என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை கடந்த நவ.27ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பட்டினப்பாக்கம் கடல்பகுதியில் மக்கள் குவிந்துள்ளனர். கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் குவிந்துள்ளனர். மாண்டஸ் புயலால் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மாமல்லபுரம் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.