தேனி
கம்பம் நகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
|கம்பம் நகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு உறை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கம்பத்தில், கூடலூர் புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கம்பத்துக்கு செல்லும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறியது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம் நகராட்சிக்கு செல்லக்கூடிய குழாயில் குடிநீர் செல்வதை நிறுத்தி வைத்தனர். மேலும் குழாய் சீரமைப்பு பணிகள் முடிவடைய 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கம்பம் நகராட்சிக்கு 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.