< Back
மாநில செய்திகள்
பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
மாநில செய்திகள்

பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
25 Nov 2022 3:10 PM IST

பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட பொத்தேரி கிராமத்தில் 180 ஏக்கர் பரப்பளவில் பொத்தேரி பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மறைமலைநகர் நகராட்சி சார்பில் 3 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறுகளில் இருந்து பொத்தேரி, காட்டூர், நின்னைக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஏரியில் கழிவுநீர் கலந்து ஏரிநீர் பச்சை நிறமாக மாறி உள்ளது. கிணற்றில் உள்ள தண்ணீரும் பச்சை நிறத்தில் உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஏரி முழுவதும் கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த ஏரி நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடலில் பல்வேறு விதமான அரிப்பு நோய்கள் ஏற்படுகிறது. பொத்தேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால் ஏரி மிகவும் மாசடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் நின்னைக்கரை பெரிய ஏரியில் இருந்து கால்வாய் வழியாக கழிவுநீர் பொத்தேரி ஏரியில் கலக்கிறது. மேலும் இந்த ஏரியை ஒட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்தும் கழிவுநீர் இந்த ஏரியில் விடப்படுகிறது.

எனவே பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் இந்த ஏரியை நேரில் கள ஆய்வு செய்து கழிவுநீரை ஏரியில் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்