< Back
மாநில செய்திகள்
ஆம்னி பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஆம்னி பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

தினத்தந்தி
|
3 Jun 2023 12:15 AM IST

விழுப்புரம் அருகே மற்றொரு சம்பவமாக தனியார் ஆம்னி பஸ் மீது கல்வீசி மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்தனர்

விழுப்புரம்

தனியார் ஆம்னி பஸ்

விழுப்புரம் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பிடாகம் பெட்ரோல் நிலையம் எதிரே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போடியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற தனியார் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே மர்மநபர்களுக்கு தொடர்பா?

முன்னதாக நேற்று முன்தினம் அதிகாலை கோலியனூர் கூட்டுரோடு அருகே சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்மீது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கல்வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். அவர்களை பஸ் டிரைவர் காரில் துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிடாகம் பெட்ரோல் நிலையம் எதிரே தனியார் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடியை உடைத்து இருப்பதால் இரு சம்பவங்களிலும் ஒரே மர்ம நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பயணிகள் அச்சம்

விழுப்புரம் பகுதியில் மர்ம நபர்கள் கல்வீசி பஸ் கண்ணாடியை உடைக்கும் சம்பவம் தொடர் கதை போல நிகழ்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கல்வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்து வரும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்